நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது.
நல்லூர் கந்தனின் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தற்போது பரவி வரும் கொரோனா தொற்றைக் கருத்திற்கொண்டு நல்லூர் முருகப் பெருமானின் இவ்வருட உற்சவம் முழுமையான சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமாகப் பேணி அடியார்களின் பங்குபற்றுதலின்றி அல்லது அந்தந்த சந்தர்ப்பங்களுக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களுடனேயே
நடைபெறவுள்ளது.
எனவே இந்த நெருக்கடிமிக்க அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மிக மிக பொறுப்புடனும் அவதானத்துடனும் நடந்துகொள்ளுமாறு நல்லைக்கந்தன் அடியார்களை மிகப் பணிவாகக் கேட்டுக்கொள்கிறோம்.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள், யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரியால் விடுக்கப்படும் சுகாதார நடைமுறைகளை கருத்திற்கொண்டும் சுகாதார அமைச்சினால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்பவும் நடைமுறைகளில் மாற்றங்கள் பற்றி அடியார்களுக்கு அவ்வப்போது அறிவிக்கப்படும்.
குழந்தைகளும் சிறுவர்களும் முதியவர்களும் ஆலயத்திற்கு வருவதை முற்றாகத்
தவிர்க்கவும்.
கொவிட் 19 நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் வீதித்தடையில் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் வேளையில் அடியார்கள் முழுமையாக நடைமுறைகளை பின்பற்றுவதோடு தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பதும் அவசியமாகும்.
ஆலயத்திற்கு அனுமதிக்கப்படும் வேளையில் ஆண் அடியார்கள் வேஷ்டியுடனும் பெண்கள் கலாசார உடைகளுடனும் வருதல் வேண்டும்.
சுகாதார நடைமுறைகளுக்கேற்ப அடியார்கள் ஆலயத்தினுள் வரையறுக்கப்பட்ட அளவில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் தேவஸ்தானத்தின் அறிவுறுத்தல்களின்படி அவர்கள் ஆலய வளாகத்தினுள் தரித்து நிற்கவோ அமர்ந்திருக்கவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.
உரிய சமூக இடைவெளியுடன் வழிபாட்டை நடாத்திச் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பக்தர்களின் நன்மை கருதியும் ஆலய உற்சவம் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் முகமாகவும் இம்முறையும் வீதித்தடைகள் நாளை நள்ளிரவு முதல் 08.09.2021 இரவு வரை முழுமையாகப் போடப்படும். வழமைபோல் மாற்றுப்பாதை அமுலில் இருக்கும்.
அடியவர்களின் சுகாதார நன்மையைக் கருத்திற்கொண்டு ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் சகல அடியவர்களும் முத்திரைச் சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதியால் மாத்திரமே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
ஆலயத்திற்கு வந்து சேரும் ஏனைய மூன்று வீதிகளும் அடியவர்கள் செல்வதற்கு முழுமையாகத் தடை செய்யப்படும். வீதித்தடைக்கு உள்ளே நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட மக்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள், நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் மாநகர சபையின் அனுமதி அட்டையுடன் ஏனைய வீதித்தடைகளினூடாகச் சென்று வர அனுமதிக்கப்படுவர்.
ஆலயத்தினுள் அடியவர்களை அனுமதிப்பது, எத்தனை பேரை அனுமதிப்பது போன்றவை தொடர்பாக அவ்வப்போது உள்ள நிலைமைகளைக் கருத்திற்கொண்டு சுகாதாரத் தரப்பின் வழிகாட்டலோடு தீர்மானிக்கப்படும்.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் அங்கப்பிரதட்சணம் செய்தல், அடி அழித்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், காவடி, தூக்குக்காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் மேற்கொள்ளுதல், தாகசாந்தி, அன்னதானம் வழங்கல் போன்றவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆலயச் சூழலிலும் ஆலயத்தை அண்டியுள்ள பகுதிகளிலும் அடியார்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கான தெய்வீக சொற்பொழிவுகள், தெய்வீக இசை அரங்குகள், நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
ஆலய உற்சவ காலத்தில் ஆலய சுற்றாடலில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றத்தவறுவோர் அல்லது மீறுபவர்களின் மீது சுகாதார நடைமுறைகளின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தற்போதைய சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமை, மீறுகின்றமை போன்றவற்றால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்.
இக் கொரோனா தொற்று சூழலினால் எம்மால் எடுக்கப்படும் விசேட நடவடிக்கைகளால் பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு மனம் வருந்துவதோடு தற்போது எழுந்துள்ள மிகக்கடுமையான நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு வழிகாட்டல்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.