துருக்கி கருங்கடல் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி, உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.
இந்த மாதம் நாட்டில் நிகழும் இரண்டாவது இயற்கை பேரழிவு இதுவாகும். இரண்டு வாரங்களாக தெற்கு கடலோரப் பகுதிகளில் பரவிய காட்டுத்தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தபோது, துருக்கி அனுபவித்த மிக மோசமான வெள்ளம், வட மாகாணங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
கஸ்தமோனுவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக இருபத்தி ஒன்பது பேரும், சினோப்பில் மேலும் இரண்டு பேரும் இறந்ததாக பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மேலும், பத்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே பார்டின், கஸ்தமோனு மற்றும் சினோப் மாகாணங்களில் ஏற்பட்ட சேதங்களை உட்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு ஆய்வு செய்தார்.
இந்த கனமழையால் வீடுகள், பாலங்கள் இடிந்து பலத்த சேதம் ஏற்பட்டது. வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வீதிகள் மூடப்பட்டன மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் முயற்சியில் பேரிடர் மீட்புத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை 1700க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.