செஞ்சோலை படுகொலை தினத்தின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை குழப்புவதற்கு, இராணுவம் மற்றும் பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்திய போதிலும் வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக, கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, செஞ்சோலை படுகொலையின் 15 ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் பதாகை முன்பாக சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் நிகழ்வு தொடர்பாக தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார், நினைவேந்தலை குழப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவைகளை மீறி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி, முல்லைத்தீவு- வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது விமானப் படை நடத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் கொல்லப்பட்டனர். 129இற்கும் அதிகமான மாணவிகள் அவயவங்களை இழந்தமை குறிப்பிடத்தக்கது.