மன்னார்- மருதமடு கிராமத்திற்கு சொந்தமான 14.5 ஏக்கர் அரச காணியை அபகரிக்க மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியை வேறு கிராமத்தவர் ஒருவர், அனுமதிப்பத்திரங்கள் இன்றி அடாத்தாக அபகரிக்க முற்பட்டு, புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை அக்கிராம மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று (திங்கட்கிழமை) மாலை, குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமையை அவதானித்த சாள்ஸ் நிர்மலநாதன், முசலி பிரதேச செயலாளருடன் கலந்துரையாடினார்
மேலும் முசலி பிரதேச காணி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, இந்த காணி அரச காணியாக எல்லைப்படுத்தப்பட்ட காணி என்பதை உறுதி செய்தனர்.
இந்த காணி அடாத்தாக பிடிக்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு வருவதாக அரச அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினருக்கு சுட்டிக்காட்டினர்.
அதன்பின்னர் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு, மருதமடு கிராமத்தில் காணியற்ற மக்களுக்கு குறித்த காணிகளை பிரித்து வழங்குமாறு முசலி பிரதேச செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினரால் பரிந்துரை செய்தமை குறிப்பிடத்தக்கது.