பாராளுமன்ற வளாகத்தில் இன்று (20) நவராத்திரி பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.
பாராளுமன்ற சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கடமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்ட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சமய வழிபாடுகளுடன், இந்துப் பாரம்பரியத்தையும் கலை மரபுகளையும் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை வழிபட்டு, வீரம், செல்வம், கல்வி மற்றும் ஞானம் ஆகியவற்றின் அருளைப் பெறும் சிறப்புமிக்க இந்து சமய விழாவாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
இலங்கையின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் இத்தகைய சமய மற்றும் கலாசார நிகழ்வுகள், பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வு, மத நல்லிணக்கம் மற்றும் கலாசார ஒற்றுமையை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.













