நள்ளிரவில் விதிக்கப்பட்ட ஊரடங்கு மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்காது என இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுகாதாரத் துறையினர் வீதிக்கு இறங்கி போராடி, நாடு முழுவதையும் முடக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தும் என அச்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாடளாவிய பொதுமுடக்கத்துக்கு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளது.
தற்போது அரசாங்கம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இரவில் பொதுமக்கள் நடமாடுவதில்லை. எனவே இந்த ஊரடங்குச் சட்டம் வெளவால்களுக்கானது.
அனைத்து மாகாணங்களிலும் கொரோனா தொற்று பரவி வருவதால், இப்போது மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதில் எந்த பயனும் இல்லை.
ஆகவே அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைப் போல நோய் பரவுவதைத் தடுப்பதற்கு முடக்கத்தை அமுல்படுத்தி நோயாளிகளை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு செய்யும்போது 70 சதவிகித நோயாளர்களை அடையாளம் காணலாம் பின்னர் நாடு மூன்று நாட்களுக்கு திறந்திருக்க வேண்டும். மீண்டும் ஒரு வாரம் முடக்கப்பட்ட வேண்டும்.
அதன்பின்னர், நாம் சமூகத்தில் உள்ள அனைத்து நோயாளிகளையும் கண்டறிந்து, தேவைக்கேற்ப சிகிச்சை வழங்கலாம், அத்தோடு அவர்களை தனிமைப்படுத்தி அதன் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.