காபூலில் இருந்து இந்திய தூதர் உள்ளிட்ட அதிகாரிகளை பத்திரமாக மீட்டது சவாலான பணியாக இருந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் சுற்றுப்பயணமாக நிவ்யோர்க் சென்றுள்ள அவர் அங்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், ‘ஆப்கான் நிலைவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், காபூல் விமான நிலையத்தில் சேவைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா இது குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர், இந்தியாவும், ஐநாவும் தொழிநுட்பம் மற்றும் அமைதி காத்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.