கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடுகளை திறந்து வைத்திருக்கும் அரசாங்கங்கள், இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆகவே சிறிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் தமது நாடும் இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று (வெள்ளிக்கிழமை) மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விசேட உரையில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டை முழுமையாக மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பாக மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அதாவது, உலகில் காணப்படும் ஒரு சில நாடுகளைத் தவிர, பொருளாதார ரீதியாக வல்லரசுகளாக இருக்கும் நாடுகள் கூட நாட்டைத் திறந்தே வைத்திருக்கின்றன.
மேலும் உலகின் சுற்றுலாத்துறை, படிப்படையாக வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாடுகளைத் திறந்து வைத்திருக்கும் அரசாங்கங்கள், இந்தச் சந்தர்ப்பத்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன.
ஆகவே சிறிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நமது நாடும், இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதனை விடுத்து மீண்டும் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாகச் சரிவடையச் செய்யும் நிலைமைக்கு கொண்டுச் செல்லக் கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.