தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலுள்ள காலப்பகுதியில், மக்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்த வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது.
அதாவது சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘பாதுகாப்பு தரப்பினர், சுகாதாரத் தரப்பினர், அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு குறித்த காலப்பகுதியில் அனுமதி வழங்கப்படும்.
மேலும் சுகாதார சேவையாளர்கள் தங்களது பணிக்கு செல்வதற்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தப்படாது.
வரையறுக்கப்பட்ட வகையில், நிதி கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்காக வங்கிகள் திறக்கப்படும். இணையம் ஊடான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை செயற்படுத்துங்கள்.
நீர், மின்சாரம், எரிபொருள் நிலையங்கள் உள்ளிட்ட சேவைகளை குறித்த காலப்பகுதியில் முன்னெடுக்க முடியும்.
இதேவேளை சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்கள், சகல வழிபாட்டுஸ்தலங்கள், மேலதிக வகுப்புகள், கூட்டங்கள், வாராந்த சந்தைகள் ஆகியவற்றினை முன்னெடுக்க முடியாது.
எனினும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில்லறைப் பொருட்கள் மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்களையும் விநியோகிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.