மட்டக்களப்பில் ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் செங்கலடி, ஏறாவூர்,வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட 3 பேரும் ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் உட்பட 10 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே இத்தகைய சூழ்நிலையில், மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்து, அநாவசியமாக வீடுகளில் இருந்து வெளியேறாமல் இருப்பார்களாயின் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.