மோசமடைந்துவரும் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஜி-7 நாடுகளின் மாநாட்டில் ஆலோசனை நடத்தவுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்த நிலையில், பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிசெய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ‘ஜி-7 தலைவர்களுடன் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து அவசர ஆலோசனை நடத்துவதற்காக கூட்டத்தைக் கூட்ட உள்ளோம்.
ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பான வெளியேற்றங்களை உறுதி செய்வதற்கும், மனிதாபிமான நெருக்கடியை தடுப்பதற்கும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயற்படுவது இன்றியமையாதது’ என பதிவிட்டுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஜி-7 நாடுகளின் ஆலோசனைக்கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, கனடா உள்ளிட்ட 21 நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில், ஆப்கானிஸ்தானின் நிலையை உலக நாடுகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரம், கல்வி, வேலை உரிமைகள் குறித்து கவலையாக உள்ளது என்றும் தெரிவித்தன.
ஜி-7 அமைப்பில் பிரித்தானியாவுடன் அமெரிக்கா, ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.