வவுனியாவில் இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் கோரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார்.
அத்தோடு, வவுனியாவில் இதுவரையில் 3 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தின் கொரோனா சமகால நிலைமை தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அதன்பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வவுனியா மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3 ஆயிரத்து 585 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 49 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.
அத்துடன் 30 வயதிற்கு மேற்பட்ட 96 ஆயிரம் பேரில் 82 சதவீதமானவர்களிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அவர்களிற்கான இரண்டாவது டோஸ் வழங்குவதற்கான திட்டம் எதிர்வரும் வாரத்தில் இருந்து ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எமது மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளின் விபரங்கள் சுகாதார அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அது கிடைக்கப்பெற்றதும் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் திட்டம் மாவட்டத்திலே ஆரம்பிக்கப்படும்” என மேலும் தெரிவித்தார்.