தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிர்காலத்தில் இணைந்து பயணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரதம செயலாளர்களாக சிங்கள அதிகாரிகள் இருக்க இயலுமென்றால் மத்திய அரசாங்கத்திலே பணிப்பாளர் நாயகங்களாக தமிழ் பேசும் அதிகாரிகள் ஏன் இருக்க முடியாது?
எனவே இவ்விடயமானது இந்த நாட்டை மீண்டும் ஒரு அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கான அறிகுறியாகவும் மீண்டும் ஒரு போரை ஏற்படுத்துவதற்குமான எத்தனிப்பாகவுமே தென்படுகின்றது.
இன்று பதவி உயர்வு பெற்ற தமிழ் பேசும் அதிகாரிகள் தங்கள் வேலை செய்த இடங்களில் விடுவிப்பினைப் பெற்று மத்திய அரசின் கீழ் தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்கச் சென்றவர்கள் அங்கு ஏற்படுத்தப்பட்ட தடை காரணமாக பொது நிருவாக அமைச்சிலே வெறுமனே கையெழுத்து வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
எனவே அந்த உயர் அதிகாரிகளை தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்று அவர்களது கடமைகளைச் செய்ய விட வேண்டும். அல்லது வடக்கு கிழக்கிலே இருக்கும் சிங்கள அதிகாரிகளை அங்கே எடுத்துவிட்டு இவர்களை வடக்கு கிழக்கிலே அவர்களது கடமைகளைச் செய்வதற்கு வழிவகுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.