சர்வதேச விசாரணைகள் ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
உலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணைகள் ஊடாக, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை பெறுவதற்கு அனைவரும் முனைப்பு காட்ட வேண்டுமென சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோர் தொடர்பான உலக நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. 1970ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையில், 20 ஆயிரம் தமிழ் மக்கள் வரை காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 30 கீழ் 1 என்ற தீர்மானத்தை 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி நிறைவேற்றுவதற்கு இணை அனுசரணை வழங்கியதாக இலங்கை அரசாங்கம் முன்னதாக கூறினாலும் அதன் பின்னர் அதிலிருந்து பின்வாங்கியது என சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி வருட கணக்கில் போராடி வருகின்றார்கள். எனவே, சர்வதேச ரீதியான விசாரணைகள் மூலம்தான் நீதி கிடைக்க முடியும். அதனை பெறுவதற்கு முனைப்பு காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.