யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானத்தினைப் பெறும் இரு குடும்பங்களுக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட இரு வீடுகள் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கினுடைய மேற்பார்வையின் கீழ் யாழ்.பாதுகாப்புப் படை வீரர்களின் சரீர ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- கோவளக்கலட்டி மற்றும் உடுவில் தெற்கு பிரதேசங்களில் வாழ்கின்ற குறைந்த வருமானத்தினைப் பெறும் இரு குடும்பங்களுக்கே இந்த வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
புத்தசாசன மற்றும் பௌத்த கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் வீடமைப்பு அதிகாரசபையின் பூரண நிதியனுசரணையில் குறித்த இரு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த நிகழ்வில் 51ஆவது காலாட் படைப்பிரிவின் தளபதி, 511, 513 மற்றும் 515வது காலாட் படைப் பிரிவுகளின் படைத்தளபதிகள், இராணுவ உயரதிகாரிகள், அரச அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.