கிரிக்கெட் அரங்கில் ‘வேகப் புயல்’ என வர்ணிக்கப்பட்ட தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுப் பெற்றுள்ளார்.
140 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசி, அதை ஸ்விங் செய்யும் வல்லமை கொண்ட 38 வயதான ஸ்டெயின், இன்று (செவ்வாய்க்கிழமை) தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டார்.
தனது ஓய்வு குறித்து ஸ்டெயின் கூறுகையில், ‘கடந்த 20 வருடங்களாகப் பல்வேறு கிரிக்கெட் அனுபவங்களை எதிர்கொண்டுள்ளேன். பல நினைவுகள் உள்ளன. பலருக்கும் நன்றி சொல்லியாகவேண்டும். இன்று அதிகாரபூர்வமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். மகத்தான பயணம். அனைவருக்கும் நன்றி’ என கூறினார்.
ஸ்டெயினின் ஓய்வுக்கு இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள், இரசிகர்கள் என அனைவரும் சமூகவலைத்தளங்களின் ஊடாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2343 நாட்களுக்கு உலகின் முதல்நிலை டெஸ்ட் பந்துவீச்சாளராக நீடித்த மகத்தான சாதனை நாயகனான ஸ்டெயின், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு பெப்ரவரிக்குப் பிறகு வேறு எந்தச் சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை.
2004ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொண்ட ஸ்டெயின் இறுதியாக 2019ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.
ஸ்டெயின் 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளையும், 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுகளையும் 47 ரி-20 போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.