சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் ரஞ்சன் ராமநாயக்க ஒரு நேர்மையான மனிதராகவும், உண்மையைப் பேசும் மனிதராகவும் கருதப்படுகிறார் என்றும் அவர் அரசியலில் அல்லது வேறு எந்த முறைகேடு அல்லது ஊழலிலும் ஈடுபடவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட கலைஞர்கள், சட்ட அறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் அவரை விடுவிப்பதில் தலையிடுமாறு அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மேலும் இது போன்ற பல கோரிக்கைகள் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, அனைத்துத் தரப்பினரும் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக தன்னிடமும் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் சஜித் பிரேமதாச அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதோடு, விரைவில் அவருக்கு மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.