தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்து நீடிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சை மேற்கோளிட்டு இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் 2000 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பின்னர் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் செயலாளரினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட உலகெங்கிலும் உள்ள 30 க்கும் மேற்பட்ட நாடுகளைப் போலவே, தமிழீழ விடுதலைப் புலிகளும் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக உள்ளது.
உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பை பாதிக்கும் பிற குற்றச் செயல்கள் காரணமாக இந்த நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை ஆரம்பத்தில் தடை செய்திருந்தனர்.
இந்நிலையில் உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் அனைத்து முயற்சிகளிலும் பிரிட்டனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.