தாய்வான் வான் பரப்பில், சீன இராணுவ ஜெட் விமானங்கள் அத்துமீறி பறந்ததாக, தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போர் விமானங்கள் மற்றும் அணுஆயுத திறன் கொண்ட விமானங்கள் உட்பட மொத்தம் 19 விமானங்கள் தங்களுடைய வான் பாதுகாப்பு மண்டலத்தில் பறந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
சீன விமானப்படையின் ஞாயிற்றுக்கிழமை பணியில் நான்கு எச்-6 ரக போர் விமானங்கள் தமது வான் பரப்பில் பறந்ததாக தாய்வான் கூறியுள்ளது.
அந்த விமானங்கள் அணு ஆயுதங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் திறன் வாய்ந்தவை என்றும் தாய்வான் தெரிவித்துள்ளது.
அந்தத் தீவு அருகே சீனாவின் விமானப்படையின் தொடர்ச்சியான பணிகள் குறித்து தாய்வான் அரசாங்கம் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புகார் தெரிவித்து வருகிறது.
தங்கள் வான் எல்லைக்குள் நுழைந்து வட்டமிட்டதாகவும், அவற்றை தங்களது விமானப்படை விரட்டியடித்ததாகவும் தாய்வான் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் இது குறித்து சீனா தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.
கடந்த 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின்போது சீனாவும் தாய்வானும் பிரிந்தன. ஆனால், தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறி வருகிறது. அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது.
தாய்வானை தமது ஆளுகையின் ஒரு அங்கமாக சீனா கோரி வந்தாலும், அதை ஏற்காமல் தாய்வான் அரசாங்கம், சுயாதீனமாக செயற்பட்டு வருகிறது. மேலும், தைவான் தன்னை ஒரு இறையாண்மை கொண்ட நாடாகவும் பார்க்கிறது.