மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஜனாதிபதி ஆல்பா கான்டே தலைமையிலான அரசாங்கம், கலைக்கப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தலைநகர் கோனாக்ரியில் உள்ள ஜனாதிபதி மாளிகை அருகே கினிய சிறப்புப் படைகள் நடத்திய கடுமையான துப்பாக்கிச்சூட்டுக்கு பின்னர் ஜனாதிபதி சிறைப்பிடிக்கப்பட்டார்.
பின்னர் அரசத் தொலைக்காட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இராணுவ கர்னல் மமாடி டம்போயா, ‘ஜனாதிபதி ஆல்பா கான்டே தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்டு விட்டது. அரசாங்கத்தை ஒரு தனி நபரிடம் ஒப்படைக்க இனியும் தாங்கள் விரும்பவில்லை.
அரசாங்கத்தை இனி மக்களே வழிநடத்துவார்கள். நாட்டைக் காப்பற்ற வேண்டியது ஒவ்வொரு இராணுவ வீரனின் கடமை’ என கூறினார்.
அத்துடன், கினியாவின் நில மற்றும் விமான எல்லைகள் மூடப்பட்டு, அதன் அரசியலமைப்பு செல்லாததாக அறிவிக்கப்பட்டது,
இருப்பினும், ஜனாதிபதியின் நிலை என்ன என்பது பற்றி அவர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
தலைநகரான கோனக்ரியில் காண்டேவின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிற உயர் அதிகாரிகளை கூட்டப்போவதாகவும் ஆட்சிக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.
கினியா கணிசமான கனிம வளங்களை கொண்டிருந்தாலும் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகவே விளங்குகின்றது. அத்துடன் நீண்ட காலமாக அரசியல் ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது.