அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்களை ஒடுக்கவே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அவசரகால பிரகடனம் தொடர்பான விசேட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அவசரகால சட்டமானது நீண்ட காலத்திற்கு பின்னர் இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. யுத்தமொன்று இடம்பெறும்போதோ, வன்முறைச் சம்பவங்களின்போதே, அல்லது கட்டுப்படுத்தமுடியாத பிரச்சினைகளின்போதே அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
ஆனால், இலங்கை வரலாற்றில் முதன்முறையான பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்காக இந்த அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் இயலாமையே இதன் ஊடாக தெரிகிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்தவோ பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவோ அன்றி, மக்களின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி இராணுவத்திற்குதான் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாம் இராணுவத்தை எதிர்க்கவில்லை. ஆனால் இராணுவம் என்பது யுத்தத்திற்காக பயன்படுத்த வேண்டிய ஒன்றாக இருக்கும்போது, பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இந்தத் தரப்பினருக்கு எவ்வாறு முடியும் என்பதுதான் எமது கேள்வியாகும்.
பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த முடியாத ஒரு அரசாங்கத்தால் முடியாதுள்ளமை வெட்கத்துக்குரியதாகும்.” என கூறினார்.