தாயுடன் கடந்த 5 நாட்களுக்கு முன் நுவரெலியா டன்சினன் பகுதியிலுள்ள காட்டுக்கு விறகு வெட்டுவதற்காக சென்று காணாமல் போயிருந்த 26 வயதுடைய யுவதி மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் நுவரெலியாவத்த கீழ் பிரிவில் வசித்த ஜெயபாலன் கற்புகதாரணி என்ற 26 வயது யுவதியாவார்.
நுவரெலியா இராணுவ முகாம் அதிகாரிகள், நுவரெலியா பொலிஸார் மற்றும் டன்சினன் தோட்டத் மக்கள் கடந்த 5 நாட்களாக இவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் சாந்திபுர பிரதேச மக்கள் கிகிலியாமான காட்டுப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த யுவதி காட்டில் கூக்குரல் எழுப்பியுள்ளார். அதன்போதே இவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
5 நாட்கள் காட்டில் தனியாக பசியுடன் அலைந்த யுவதிக்கு, பிரதேச மக்கள் உணவுகளை வழங்கிய பின் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மீட்கப்பட்ட யுவதி தெரிவிக்கையில், “தாயுடன் டன்சினன் தோட்டத்தில் இருந்து விறகு வெட்ட சென்றவேளையில் வழி தவறி, பல பாதைகளில் அங்கும் இங்கும் அலைந்து வீடு திரும்ப முடியாமல் தவித்தேன்.
மேலும், இரவு வேளைகளில் அச்சம் காரணமாக எங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.