மன்னார், மடு – பரப்புக்கடந்தான் வீதியில் அகற்றப்பட்ட பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பரப்புக்கடந்தான் பகுதியில் இருந்த பிள்ளையார் சிலை ஒரே இரவில் சிதைக்கப்பட்டு, அப்பகுதியில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.
அதன்பின்னர், குறித்த பகுதியில் வைக்கப்பட்ட அந்தோனியார் சிலையை அகற்றிய பொலிஸார், மடு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
மடு – பரப்புக்கடந்தான் வீதியில், மடு தேவாலயத்தில் இருந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த பிள்ளையார் சிலையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாயமாகியுள்ளதுடன், அதேதினத்தில் குறித்த இடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் மரத்தின் கீழ் குறித்த பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்ததாக மக்கள் சுட்டிக்காட்டினர்.
குறித்த பகுதி காட்டுப்பகுதி என்பதனால், மதங்கள் கடந்து அப்பகுதியால் செல்பவர்கள் அனைவரும், பிள்ளையார் சிலையை வணங்கி விட்டு செல்வது வழக்கம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தற்போது பிள்ளையார் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பாக மடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.