மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் இன்று (புதன்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி அட்டையைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது.
மேலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களை உடனடியாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார துறையினர் கோரிக்கை முன் வைத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் பொது சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டமைக்கான அட்டையை பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முதற்கட்டமாக 30 வயதிற்கு மேற்பட்டவர்களின் கொரோனா தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
30 வயதிற்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களின் முழுமையான விபரங்களை பொது சுகாதார பரிசோதகர்கள் பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடி, மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் சந்தியில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடி, வங்காலை-நானாட்டான் பிரதான வீதியில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடி உள்ளடங்களாக பல்வேறு சோதனைச் சாவடிகளில் இராணுவத்தின் உதவியுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் கொரோனா அட்டைகளை பரிசோதித்து வருகின்றனர்.
தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தவும் அல்லது அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதார துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.