ஆசியா பசிபிக் வணிக உடன்படிக்கையான, தாராள வணிக ஒப்பந்தத்தில் சேர்வதற்கு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா விண்ணப்பித்துள்ளது.
இதற்கான கடிதம், சீன வணிகத்துறை அமைச்சர் வாங் வென்டாவ்வால், நியூஸிலாந்து வணிக அமைச்சர் டேமியன் ஓ கொன்னோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விண்ணப்பம் அனுப்பப்பட்டதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிப்பதற்காக சீன அமைச்சர் வாங் – ஓ கொன்னோர் இருவரும் தொலைபேசி ஊடாக உரையாடினர் என்று சீன வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆக்கஸ் ஒப்பந்தம் குறித்த தகவல் வெளியான மறு நாள் சீனா இந்த விண்ணப்பத்தை செய்துள்ளது.
முதல் முதலில் ‘பசிபிக் அளாவிய கூட்டாண்மை’ என்ற பெயரில் இந்த ஒப்பந்தம் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் முன்னெடுக்கப்பட்டது. ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்தும் நோக்கோடு இந்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது.
அமெரிக்கா இதில் இருந்து 2017ஆம் ஆண்டு வெளியேறுவது என்று டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்த பிறகு, ஜப்பான் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, இதன் பெயர் விரிவான, முற்போக்கான பசிபிக் அளாவிய கூட்டாண்மை ஒப்பந்தம் என்று மாற்றப்பட்டது.
2018ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் அவுஸ்ரேலியா, கனடா, சிலி, ஜப்பான், நியூஸிலாந்து உட்பட 11 நாடுகள் கையெழுத்திட்டிருந்தன. இந்த ஒப்பந்தத்துக்கான நிர்வாக மையமாக நியூஸிலாந்து செயற்படுகிறது.