அரசியல் தலைவர்கள் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளவும் நீண்டகாலமாக தாமதமான தேசிய தேர்தல்களை நடத்துவதற்கு முன்னுரிமை வழங்குமாறும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை சோமாலியாவிடம் வலியுறுத்தியுள்ளது.
ஆபிரிக்க நாடான சோமாலியாவில் அரசியல் நெருக்கடி மோசமாகி வரும் நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடி நிலமை குறித்து நேற்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தியது.
அதிகாரிகளை பணியமர்த்துவதற்கும் பணிநீக்கம் செய்வதற்கும் பிரதமர் முகமது ஹுசைன் ரோபலின் அதிகாரத்தை ஜனாதிபதி முகமது அப்துல்லாஹி முகமது நிறுத்திவைத்து ஒருநாட்களின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது சோமாலிய அரசாங்கத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடு மற்றும் தேர்தல் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்படாமை மற்றும் செயலில் உள்ள எதிர்மறையான தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் ஆழ்ந்த கவலை வெளியிட்டனர்.
மேலும் சோமாலியாவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டுவருவதற்கான முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.