யாழ்ப்பாணம்- அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்.பொலிஸாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, கொலை செய்யப்பட்டவரது மனைவியுடன் தொடர்பை பேணியதாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொல்லப்பட்டவரின் மனைவியிடம் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவரின் மனைவியுடன் அவருக்கு இருந்த தொடர்பு காரணமாக எழுந்த பிரச்சினைதான், குடும்பத்தலைவரை கொலை செய்யும் முடிவுக்கு கொண்டு சென்றுள்ளது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த இருவரும் இணைந்தே குடும்பத்தலைவரை கொலை செய்துள்ளனர் என ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இதற்கு முன்னதாக கொல்லப்பட்டவரின் மனைவி பொலிஸாருக்கு தெரிவிக்கையில் “கணவன் தினமும் போதையில் வந்து தன்னுடன் தர்க்கப்பட்டு, தன்னை தாக்குவதாகவும் சம்பவத்தினத்தின்றும் அவ்வாறு தன்னை தாக்கியமையினால், ஆத்திரத்தில் கையில் அகப்பட்ட திருகுவளையால் திருப்பி தாக்கியபோது அவர் உயிரிழந்துவிட்டார்” என தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் கணவனை அடித்து கொலை செய்த மனைவி அளித்த வாக்குமூலம்