உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் திருப்தியளிப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை தாமதமானது என பல்வேறு தரப்பினர் கூறிய குற்றச்சாட்டுகளை அவர் கடுமையாக மறுத்துள்ளார்.
மேலும், இலங்கையிலும் உலகிலும் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுடன் ஒப்பிடுகையில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த தாக்குதல் தொடர்பாக 5 உயர் நீதிமன்றங்களில் இதுவரை 9 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 25பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விசாரணை நடத்த மூன்று நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பாக இதுவரை 23 ஆயிரத்து 700 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
அந்தவகையில், கிட்டத்தட்ட 2 அரை வருடங்களாக நடந்து வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் திருப்திகரமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.