கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கிடையில் மோதல் எழுந்துள்ளது.
அமைச்சர்களான விமல், கம்மன்பில, வாசுதேவ உள்ளிட்டவர்கள் இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளது.
அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜாதிக நிதஹஸ் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடது முன்னணி, லங்கா சம சமாஜ கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி ஆகியன ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி, அரசாங்க கூட்டணியில் உள்ள 10 கட்சிகளின் தலைவர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மூன்று பக்கம் கொண்ட கடிதத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடிதத்தில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் எரிவாயு விநியோக ஏகபோகம் ஒரு நிறுவனத்திற்கு மாற்றுவது குறித்த கவலைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் கோரப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தரப்பினர் கடந்த வியாழக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் அலரிமாளிகளில் மேற்கொண்ட கலந்துரையாடல் தோல்வியில் முடிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.