வங்கக்கடலில் உருவான ‘குலாப்’ புயல் ஆந்திராவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) கரையைக் கடந்தது. இதன்போது இருவர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.
இது மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை விசாகப்பட்டினம் – கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்தப் புயலுக்கு ‘குலாப்’ எனப் பெயரிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் கரையைக் கடக்க தொடங்கிய குலாப் புயல், வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு இடையே ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கலிங்கப்பட்டினம் அருகே நேற்றிரவு கரையைக் கடந்தது.
அப்போது கலிங்கப்பட்டினத்தில் 90 கி.மீ. வேகத்திலும், ஒடிசாவின் கோபால்பூா் பகுதியில் 30 கி.மீ. வேகத்திலும் பயங்கர காற்று வீசியது.
அதன்பின்னர், புயல் ஒடிசாவின் கோராபுட் மாவட்ட கடல் பகுதிக்குள் நுழைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கோராபுட், ராயகடா, கஜபதி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ’குலாப்’ கரையைக் கடக்கும்போது காற்று வேகமாக வீசியதால், ஆந்திர மீனவா்கள் சென்ற படகு கவிழ்ந்து அதிலிருந்த 6 மீனவா்கள் கடலில் விழுந்தனா்.
அவா்களில் 3 போ் மீட்கப்பட்டனா். இரண்டு பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.