ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துக்களை வரவேற்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை செயற்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வெகுஜன ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைச்சரை கேளுங்கள் எனும் வளம் சார்ந்த அபிவிருத்திக் கலந்துரையாடலில் பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு உள்ளகக் கட்டமைப்புகள் மூலமான நடவடிக்கை மேற்கொளள்ளப்படும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி> புலம்பெர் தமிழ் மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான ஆர்வத்தினை வெளியிட்டிருப்பதுடன் புலம்பெயர் முதலீடுகளை வரவேற்றிருக்கின்றார்.
புலம்பெயர் மக்களை இணைத்துக் கொண்டு பயணிப்பது எமது மக்களை பலப்படுத்தும் என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றேன்.
90 களின் ஆரம்பத்தில் தேர்தல் திருத்தச் சட்டத்திற்காக நாம் முன்வைத்த முன்மொழிவுகளில் 18 வயதிற்குப் பின்னர் புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தோம்.
தற்போது புலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தினை விரைவாக உருவாக்க முடியும்.
அதுமாத்திரமன்றி, காணாமல் போனோர் விவகாரம் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றிலும் ஜனாதிபதியின் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மையில் இவ்வாறான கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவை என்பதுடன் அவற்றை செயற்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களும் உற்சாகப்படுத்தல்களும் தமிழர் தரப்பிலிருந்தும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
அந்தவகையில், தென்னிலங்கையுடன் பலமான தேசிய நலலிணக்கத்தினை வலுப்படுத்தி வருகின்ற தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில், ஜனாதிபதியின் கருத்துக்களை செயற்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளேன்” என்று தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வேணடுகோளுக்கு அமைய, காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போது> காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்வமுடன் தனக்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய போதிலும் கொவிட் சூழல் காரணமாக அதனை முன்னெடுப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது என்பதையும் கடற்றொழில் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.