கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. இதன் முடிவுகளை தற்போது பார்க்கலாம்.
முதலாவதாக நடைபெற்ற போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
அபுதாபியில் நடைபெற்ற இந்த 38ஆவது லீக் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ராகுல் திரிபத்தி 45 ஓட்டங்களையும் நிதிஷ் ரணா ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், ஜோஸ் ஹசில்வுட் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, போட்டியை இறுதி வரை விறுவிறுப்பாக நகர்த்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு இறுதி பந்தில் வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 16 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியதோடு பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறிய இரண்டாவது அணியாகவும் மாறியது.
சென்னை அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக டு பிளெஸிஸ் 43 ஓட்டங்களையும் ருத்துராஜ் கெய்க்வாட் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சில், சுனில் நரேன் 3 விக்கெட்டுகளையும் பிரசீத் கிருஸ்னா, லொக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஆந்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற ரவீந்திர ஜடேஜா தெரிவுசெய்யப்பட்டார்.
அடுத்ததாக நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.
டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளென் மேக்ஸ்வெல் 56 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், பும்ரா 3 விக்கெட்டுகளையும் போல்ட், ஆடம் மில்ன் மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 18.1 ஓவர்களுக்கு 111 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பெங்களூர் அணி 54 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக ரோஹித் சர்மா 43 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பெங்களூர் அணியின் பந்துவீச்சில், ஹர்சல் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் யுஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுகளையும் க்ளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் சிராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
குறிப்பாக இப்போட்டியில், நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணியில் இருக்கும் ஹர்சல் பட்டேல் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில், அசத்திய க்ளென் மேக்ஸ்வெல் தெரிவுசெய்யப்பட்டார்.