வடகொரியா விமானத்தை தாக்கி அழிக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதித்துள்ளதாக வட கொரியாவின் அதிகாரபூர்வ அரச ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.
வடகொரியா அணுசக்தி திறன் கொண்டதாகக் கருதப்படும் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஏவிய சில நாட்களுக்குப் பிறகு நேற்று (வியாழக்கிழமை) இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஏவுகணை, ரேடார், விரிவான போர் கட்டளை வாகனம் மற்றும் போர் செயற்திறன் ஆகியவற்றின் நடைமுறை செயற்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக இராணுவ ஆயுத மேம்பாட்டாளரான அகாடமி ஆஃப் டிஃபென்ஸ் சயின்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணையில் இரட்டை சுக்கான் கட்டுப்பாடு மற்றும் இரட்டை உந்துவிசை விமான இயந்திரம் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் உள்ளன.
கே.சி.என்.ஏ அறிக்கையை சரிபார்க்க விரிவான பகுப்பாய்வு தேவை என்று தென்கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆளும் தொழிலாளர் கட்சியின் சக்திவாய்ந்த பொலிட்பீரோ மற்றும் மத்திய குழுவின் உறுப்பினர் பாக் ஜோங் சோன் மேற்பார்வையிட்ட இந்த சோதனையில் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் கலந்து கொண்டதாக தெரியவில்லை.
இப்படிப்பட்ட ஏவுகணை பரிசோதனைகள் நிலையற்றதன்மை மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்குவதாக அமெரிக்காவின் உட்துறை செயலர் அந்தோனி ப்ளிங்கன் கூறினார். ஆனால் வடகொரியாவோ தற்காப்புக்கு ஆயுதங்கள் தேவை என கூறியுள்ளது.
மேலும் அமெரிக்காவும், தென் கொரியாவும் இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாகவும் வட கொரியா கூறிவருகிறது.
கடுமையான தடைகள் இருந்தபோதிலும், பியோங்யாங்கிற்கு அதன் ஆயுத வளர்ச்சியை குறைப்பதில் எந்த நோக்கமும் இல்லை என்பதற்கான தெளிவான அறிகுறியாக சமீபத்திய சோதனைகள் பார்க்கப்படுகின்றன.
மார்ச் மாதத்தில், நாடு தடைகளை மீறி, பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்தது, இது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து கடுமையான கண்டனங்களைத் தூண்டியது.
கடந்த மாதம் ஐ.நா அணுசக்தி நிறுவனம், வடகொரியா அணு ஆயுதங்களுக்கு புளூட்டோனியத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு அணு உலையை மீண்டும் தொடங்கியதாக தோன்றியதாகவும் இது மிகவும் கவலை அளிக்கும் வளர்ச்சி என்றும் கூறியது.
இதனிடையே, தென் கொரியா உடனான ஹொட்லைன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய வாரங்களில் சாத்தியமான அணுசக்தி திறன்களைக் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் குரூஸ் ஏவுகணைகளையும் ஏவியது.
கடந்த ஒரு மாத காலத்துக்குள் வட கொரியா நடத்திய நான்காவது ஏவுகணை பரிசோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.