வன்னி மாவட்ட பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் காதர்மஸ்தான் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனகரட்ணம், சுமதிபால மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த காதர் மஸ்தான், “கிராமத்துடனான கலந்துரையாடல் ஊடாக அந்தப்பகுதியின் தேவைப்பாடுகளை மக்களூடாக அறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான அறிவுரைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 3 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் வெற்றிபெற்ற வட்டார உறுப்பினர்களுக்கு 4 மில்லியனும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுக்கு 20 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கான அபிவிருத்திகளை சரியான முறையில் வழங்குவதற்கான ஆலோசனைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.