வெளிநாடுகளில் பல பில்லியன் டொலர்களில் சொத்துகளைச் சட்டவிரோதமாக வாங்கிக் குவித்த 91 நாடுகளின் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி அரசியல் தலைவர்களின் பெயர்களையும், வெளியிடப்படாத ஆவணங்களையும் ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களை சர்வதேச புலனாய்வுப் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு (ஐசிஐஜே) வெளியிட்டுள்ளது.
பிபிசி, தி கார்டியன் நாளேடு, இந்தியாவில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 150 ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் புலனாய்வு செய்து இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளனர். ஏறக்குறைய 1.90 கோடி இரகசியக் கோப்புகள் இதில் அடங்கியுள்ளன.
‘சுப்பர் ரிச்’ எனக் கூறப்படும் உலக அளவிலான பெரும் கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் வாங்கிக் குவித்த சட்டவிரோதச் சொத்துகளின் நிதி விவகாரங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஜோர்தான் நாட்டின் அரசர், உக்ரைன் ஜனாதிபதி, கென்யா, ஈக்வெடார் நாட்டின் பிரதமர்கள், செக் குடியரசின் பிரதமர், பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நிதிச் செயற்பாடுகள், இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், ரஷ்யாவின் 130 கோடீஸ்வரர்களின் பெயர்கள், அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கோடீஸ்வரர்களின் பெயர்கள் அடங்கியுள்ளன.
வெளிநாடுகளில் உள்ள 956 நிறுவனங்களின் இரகசிய ஆவணங்கள், பல்வேறு நாடுகளின் அதிகாரமிக்க 356 அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் பெயர்கள், அமைச்சர்கள், தூதர்கள் உள்ளிட்டோர் இதில் சிக்கியுள்ளனர்.
பணக்கார நாடுகளால் உருவாக்கப்பட்ட நிதி ரகசிய முறையால் உலகெங்கும் சட்டத்தின் ஆட்சி எவ்வாறு வளைந்து ஒடிந்தது என்பதை, சமமற்ற நோக்கை இந்த விசாரணை வழங்குகிறது.
‘உலகளாவிய அரசியலில் எந்த அளவுக்கு ஆழமாக ரகசிய நிதி ஊடுருவி இருக்கிறது என்றும், வெளிநாடுகளில் சட்டவிரோத நிதிப் பதுக்கல், முதலீடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதில் அரசாங்கங்களும் உலகளாவிய அமைப்புகளும் ஏன் சிறிய முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கான ஆய்வுகளையும் அறிக்கை வழங்குகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.