மேகதாது திட்ட பணிகளை ஒரு மாதத்தில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் டி.கே.சிவக்குமார் மேலும் கூறியுள்ளதாவது, “மேகதாது திட்டத்தை செயற்படுத்த எந்த நடவடிக்கையும் மாநில அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை.
மேலும், மத்திய அரசின் அனுமதிகளை பெற்று அந்த திட்ட பணிகளை இந்த அரசு தொடங்காதது ஏன்?
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது. அதனால் மேகதாது திட்ட பணிகளை ஒரு மாதத்தில் தொடங்க வேண்டும் என்று கெடு விதிக்கிறேன்.
இல்லாவிடின், நாங்கள் மாநில அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடத்துவோம். நீர்ப்பாசன திட்டங்களை அமுல்படுத்துவதில் அரசு மந்தமாக செயற்படுவது சரியல்ல.
கிருஷ்ணா, மகதாயி திட்டங்களையும் அமுல்படுத்த இந்த அரசு ஆர்வம் காட்டவில்லை. கிருஷ்ணா விஷயத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள்.
இதேவேளை மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாட்டின் நீர், நிலம், நிதி எதுவும் தேவை இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.