கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 மாதங்களாக இடம்பெறாதிருந்த மாவட்ட காணி திட்டமிடல் பயன்பாட்டுக் குழுக்கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய கே.கருணாகரன் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பிரதேச செயலக ரீதியாக முன்வைக்கப்பட்டிருந்த 245 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், பிரதேச செயலக ரீதியில் காணப்படுகின்ற அரச திணைக்களங்களுக்கான காணி ஆவணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில், நேற்று மாவட்ட பயன்பாட்டு குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முதலீட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் குறுங்கால மற்றும் நீண்டகால குத்தகைக்கு காணிகளை வழங்குவது தொடர்பாகவும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான மயானங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்காக காணிகளை பாராதீனப்படுத்துதல் தொடர்பாகவும் இதன்போது பரிசீலனை செய்யப்பட்டு, சிபாரிசுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.