கேகாலை, தெரணியகலை – நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரி தோட்டத்தில் கடந்த ஜனவரி 02 ஆம் திகதி உயிரிழந்த 14 வயது சிறுவனின் மரணத்தில் நிலவும் மர்மம் காரணமாக, அவிசாவளை நீதவான் பிரமோத் ஜயசேகர முன்னிலையில் இன்று அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
ஜனவரி 2 ஆம் திகதி குறித்த சிறுவன் வீட்டில் இருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
சம்பவம் தொடர்பாக நூரி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, சிறுவனின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது குருவிட்ட சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகத் தெரிவித்து, அவரது உறவினர்களும் நூரி தோட்ட மக்களும் கடந்த 6 ஆம் திகதி தோட்டப்பகுதியில் எதிர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
மரணத்தின் பின்னாலுள்ள உண்மை வெளிவர வேண்டும் எனவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறியும் நோக்கில், அவிசாவளை நீதவான் முன்னிலையில் இன்று சடலம் தோண்டி எடுக்கப்பட்டதுடன், மேலதிக பிரேதப் பரிசோதனைக்காக அது அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.














