நாட்டை முறையாக நிர்வகிக்க முடியாவிட்டால், தகுதி வாய்ந்த தரப்பிற்கு ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு, ஆட்சி பொறுப்பிலிருந்து வெளியேறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,
மக்களுக்கு பொறுத்துக் கொள்ள முடியாதளவுக்கு, அத்தியாசவசியப் பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது.
சமையல் எரிவாயு, சீமெந்து, பால்மா உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றமானது, கொரோனா காலத்தில் மக்களை பெரிதும் பாதிப்படைய வைத்துள்ளது.
இதனால், மக்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மூச்சுவிடக்கூட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் ஊடாக இந்த அரசாங்கத்திற்கு பொருளாதாரத்தை முறையாக கையாள உரிய வேலைத்திட்டங்கள் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
அரசாங்கத்திடம் முறையான கொள்கைகள் இல்லை. மக்கள் தொடர்பாக இதுவரை இந்த அரசாங்கம் சிந்திக்கவும் இல்லை.
மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட இந்த அரசாங்கத்தினால், மக்களுக்கான நிவாரணங்களை வழங்க முடியாவிட்டால், வேலை செய்யக்கூடிய தரப்பிற்கு ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, வெளியேற வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்- எனத் தெரிவித்தார்.