மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் புதிய பிரதமராக அலெக்சாண்டர் ஷாலென்பெர்க் பதவியேற்றுள்ளார்.
முன்னதாக பிரதமராக இருந்த செபாஸ்டியன் கர்ஸ் முறைக்கேடு குற்றச்சாட்டு காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து நேற்று (திங்கட்கிழமை) அலெக்சாண்டர் ஷாலென்பெர்க் பதவியேற்றார்.
முன்னாள் பிரதமர் செபாஸ்டியன் கர்ஸின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அலெக்சாண்டர் ஷாலென்பெர்க்கு ஜனாதிபதி அலெக்சாண்டர் வான் டெர் பெலன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதேவேளை புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக பிரான்ஸுக்கான தூதராக இருந்த மிக்கேல் லின்ஹர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளும் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த 35 வயதான செபாஸ்டியன் கர்ஸ், ஊடகங்களில் அரசாங்கப் பணத்தைச் செலவிட்டு கருத்துக்கணிப்புகள் மற்றும் சாதகமான செய்திகளை வெளியிட்டு தனது செல்வாக்கை அதிகரிக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அவர் தான் பதவி விலகுவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும் கட்சித் தலைவராக அவர் நீடிப்பார்.