தமிழ் மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் அவர்கள் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்திக்கொள்கின்ற வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்கக் கூடிய வகையில், தமது ஜனநாயக உரிமைகளுக்கு முறையான அங்கீகாரம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழர்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே எந்தவித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை விரைவாக உருவாக்க வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கை என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மக்களுக்கு உறுதியளித்தமை பிரகாரம் அடுத்த ஆண்டுக்குள் புதிய அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் முறைமை உருவாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவத்தின் 72ஆவது ஆண்டு நிறைவு விழாவில் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் வாக்குறுதிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என கூறினார்.
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் பொருட்படுத்தாமை மற்றும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நினைக்காதமையே கடந்த முப்பது ஆண்டுகால யுத்ததிற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் நாட்டில் முறையான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் மாத்திரமே அபிவிருத்தியும் முன்னேற்றமும் நாட்டில் அமைதியும் ஏற்படும் என்றும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார். நன்றி கேசரி