நீலகிரி, கோவை உட்பட எட்டு மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின்படி, மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு, வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே இன்று கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.