ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை தடுத்து நிறுத்த இஸ்ரேல் இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்காது என இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் யாயிர் லாபி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வந்துள்ள யாயிர் லாபி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். தேவைப்பட்டால் இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளையும் எடுக்க இஸ்ரேல் தயங்காது.
தீய சக்திகளிடமிருந்து உலகைப் பாதுகாக்க நாடுகள் இராணுவ சக்தியைப் பயன்படுத்துவது காலம் காலமாக நடந்து வருவதுதான்.
ஈரான் போன்ற பயங்கரவாத அரசாங்கம், அணு ஆயுதம் பெறுவதை இந்த உலகம் அனுமதிக்காது என்பதை ஈரானுக்குப் புரியவைக்க வேண்டும். அதனை உணராதவரை, அந்த நாடு அணு ஆயுதத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்’ என கூறினார்.
இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் நீண்ட காலமாக இருந்து வந்த பகையை நீக்கி, இரு தரப்புக்கும் இடையே அமெரிக்கா முன்னிலையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான திட்டம் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக் காலத்தின்போது தொடங்கப்பட்டது.
‘ஆப்ரஹாம் உடன்படிக்கை’ என்றழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் செயலாக்கம் குறித்து ஆலோசிப்பதற்காக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் யாயிர் லாபிடும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஸாயெத் அல் நஹ்யான் ஆகியோர் வொஷிங்டனில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.