நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட தமது புதிய ஏவுகணை சோதனை வெற்றியளித்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.
வட கொரியா சமீபத்திய வாரங்களில் ஹைப்பர்சொனிக் மற்றும் நீண்ட தூரம் செல்லும் ஏவுகணை என பலவிதமான ஆயுத சோதனைகளை நடத்தி வருகின்றது.
ஜப்பான் கடல் என்றும் அழைக்கப்படும் கிழக்கு கடலில் மற்றுமொரு ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டதாக தென்கொரியா நேற்று குற்றம் சாட்டியிருந்தது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ள வடகொரியா, குறித்த ஏவுகணை புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டது என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஏவுகணை கடந்த வாரம் வட கொரியாவில் நடந்த பாதுகாப்பு கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட பல புதிய ஆயுதங்களில் ஒன்றாகும் என்றும் வடகொரியா அறிவித்துள்ளது.
ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை சோதனை செய்வதை ஐ.நா. தடை செய்துள்ள நிலையில் வடகொரியா தொடர்ந்தும் சோதனையை நடத்தி உலகநாடுகளை எச்சரித்து வருகின்றது.