சீனாவில் இருந்து தாய்வான் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில், தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சி.என்.என். நடத்திய டவுன் ஹால் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி பைடனிடம், சீனா தனது சொந்தம் என்று கூறிக்கொள்ளும் தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா முன்வருமா என கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜோ பைடன், ‘ஆமாம், அதைச் செய்ய எங்களுக்கு ஒரு கட்டாயம் உள்ளது’ என பதிலளித்தார்.
மேலும், அவர் கூறுகையில், சீனா மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருக்கப் போகிறார்களா என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை
ஏனென்றால், சீனா, ரஷ்யா மற்றும் உலகின் மற்ற பகுதிகளுக்கு நாங்கள் உலக வரலாற்றில் மிக சக்திவாய்ந்த இராணுவம் என்று தெரியும்.
சீனாவுடனான பனிப்போர் எனக்கு வேண்டாம். நாங்கள் பின்வாங்கப் போவதில்லை, எங்களது எந்தக் கருத்தையும் மாற்றப் போவதில்லை என்பதை சீனா புரிந்து கொள்ள வேண்டும்’ என கூறினார்.
எனினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின், கருத்துகளுக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை.
தாய்வானுடன் அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லை. ஆனால், உறவுகள் சட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா ஆயுதங்களை விற்கிறது. இதனால், தாய்வானை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை வழங்க வேண்டும் என அமெரிக்கா கூறுகிறது.
தாய்வான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்கா தாய்வானைப் பாதுகாக்கும் என்று ஒகஸ்ட் மாதத்தில் ஜனாதிபதி கூறிய பிறகு, தாய்வான் மீதான அமெரிக்க கொள்கை மாறவில்லை என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தாய்வானுடனான அமெரிக்க பாதுகாப்பு உறவு, தாய்வான் உறவுகள் சட்டத்தால் வழிநடத்தப்படுகிறது. சட்டத்தின் கீழ் எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் நிலைநிறுத்துவோம். தாய்வானின் தற்காப்புக்காக நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம், மேலும் தற்போதைய நிலையில் ஒருதலைப்பட்சமாக மாற்றங்களை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்’ என கூறினார்.
சீனா, ஜனநாயக தாய்வானை பிரிந்த மாகாணமாக பார்க்கிறது. ஆனால் தாய்வான் தன்னை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பார்க்கிறது.
தீவு அருகே சீனாவின் விமானப்படையின் தொடர்ச்சியான அத்துமீறல்கள் குறித்து ஒரு வருடத்திற்கும் மேலாக தாய்வான் புகார் அளித்து வருகிறது.
சமீபத்தில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், தாய்வான், அமைதியான முறையில் சீனாவுடன் இணைக்கப்படுமென கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.