கொரோனா வைரஸின் மீதான மக்களின் ஆர்வம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் தற்போது, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதில் அவர்கள் கவலைப்படுவதில்லை என்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலபேஜ், சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்காதது சாதாரணமாக கருதப்பட வேண்டிய ஒன்றல்ல என்று கூறினார்.
இந்த நாட்களில் தாம் வீதிகளில் பார்ப்பது எதிர்காலத்தில் மிகவும் துரதிருஷ்டவசமான சகுனமாக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பெரும்பாலான மக்கள் தங்கள் முகமூடிகளை சரியாக அணிய மறந்துவிட்டனர் என்றும் பெரும்பாலான முகமூடிகள் வாய் மற்றும் மூக்கிற்கு பதிலாக கழுத்து அல்லது கன்னத்தை மறைக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
இப்போதெல்லாம், மக்கள் சமூக தூரத்தை பராமரிக்க மறந்துவிட்டனர் என்றும் இந்த நாட்களில் இது குறித்து கடுமையான விமர்சனங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம், சுகாதார அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சமூகத்தை திருத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் பொறுப்புடன் செயற்பட்டால், பயங்கரமான வைரஸை அழிக்க முடியும் என்றும் மேலும் மற்றொரு அலை வருவதை நம்மால் தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.