மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சராசரியாக தாக்குதலை நடத்திய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மோட்டார் வண்டியில் பயணித்தவரை பொலிஸார் நிறுத்தியபோதும் அதனை பொருட்படுத்தாமல் குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்றதாலேயே பொலிஸ் அதிகாரி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் அதிகாரி தாக்கும் வகையிலான காணொளி வெளியாகி நேற்று பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரிக்கு தாக்குதலை நடத்த எந்த உரிமையும் இல்லை என தெரிவித்துள்ள சரத் வீரசேகர, சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
அத்தோடு பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரி அல்லது பிற கீழ்நிலை அதிகாரிகள் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை கண்டறிந்தால் ஏ.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இலஞ்சம் கோருதல், பாலியல் இலஞ்சம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.