அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 2 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றினை யாழில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரெலோவின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று இணையவழியில் இடம்பெற்ற கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் சார்பாக பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
அத்தோடு எதிர்வரும் இரண்டாம் திகதி யாழில் நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் பங்கேற்கும் என்றும் ரெலோவின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த கூட்டத்திற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.