இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள போராட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.
இந்தப் போராட்டம் இன்று மதியம் 12 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டில் உள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களும் கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் நாட்டு மக்களுக்கு மின்சாரம் இருக்கின்ற நிலையில்தான், தாங்கள் கொழும்புக்கு வருவதற்குத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையை இரத்து செய்யுமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், கனியவள கூட்டுத்தாபனம் மற்றும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தொழிற்சங்கங்களும் இன்று போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.