பருவநிலை மாற்றம் குறித்த தரவுகளை சிறிய தீவு நாடுகளுக்கு வழங்குவதற்கு இந்திய விண்வெளி ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தால் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சிறிய தீவு நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை கிளாஸ்கோவில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த திட்டத்தால் சிறிய தீவு நாடுகளுக்கு நிதியும், தொழில்நுட்பங்களும் எளிதில் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
அந்த நாடுகளில் உள்ள மக்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் இந்த திட்டம் பாதுகாக்கும். இந்த திட்டம் வெற்றி பெறுவதற்காக ஐ.நாவுடனும், மற்ற நாடுகளுடனும் இந்தியா இணைந்து செயற்படும்.
பருவநிலை மாற்ற விவகாரத்தில் பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகள், கரீபியன் தீவு நாடுகள் ஆகியவற்றுடன் இந்தியா ஒத்துழைத்து செயல்பட்டு வருகிறது. புயல்கள் உருவாக்கம், பவளப்பாறைகள், கடற்கரைகள் உள்ளிட்டவற்றை செயற்கைக்கோள் வாயிலாக கண்காணித்து, அவை தொடர்பான தரவுகளை தீவு நாடுகளுக்கு இநதிய வின்வெளி ஆய்வு மையம் வழங்கவுள்ளது’ என் தெரிவித்துள்ளார்